கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில் சமூகப் பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில் சமூகப் பணியாற்ற விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த ஆதரவற்றோர்,  ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சுயதொழில் மூலம் வருமானம் பெற வழிவகை செய்வதற்காக சிறுதொழில் தொடங்கிட தூத்துக்குடி மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மாவட்ட ஆட்சியரை தலைவராகவும்,  மகளிர் திட்ட  அலுவலரை துணைத் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை பொருளாளராகவும் கொண்ட குழு அரசின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்படவுள்ளது.

இச்சங்கத்தை திறம்பட செயல்படுத்திட ஒரு கெளரவ செயலர்,  இரண்டு கெளரவ இணைச்செயலர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் என ஆறு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பொறுப்புக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்களில் சமூகப் பணிக்கு எவ்வித புகார்களுக்கும் இடமின்றி ஆர்வமுடன் செயல்படும் நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவர்கள் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கைகளும் நீதிமன்ற வழக்குகளும் நிலுவையில் இருக்கக்கூடாது. இவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக தேர்வு செய்யப்படுவர்.  விருப்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படத்துடன் முழு விவரம் அடங்கிய விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.