தூத்துக்குடியில் சுனாமி நினைவு தினம்

சுனாமி நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் கடலில் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி இந்தோனேஷியா அருகே பசிபிக் பெருங்கடலில் உருவான நிலநடுக்கம் சுனாமி அலைகளாக உருவெடுத்தது. இந்த சுனாமியின் தாக்குதலில் ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேரும், சுற்றுலா சென்ற இடத்தில் தூத்துக்குடியை சேர்ந்த 9 பேரும் உயிர் இழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 615 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி தாலுகாவில் 634 வீடுகளும், சாத்தான்குளத்தில் 5 வீடுகளும், திருச்செந்தூரில் 83 வீடுகளும், விளாத்திகுளத்தில் 13 வீடுகளும் சேதம் அடைந்தன. மாவட்டத்தில் 638 கட்டுமரங்கள் சேதம் அடைந்தன.

இத்தகைய பெரும் அழிவை ஏற்படுத்தி மக்கள் மனதில் நீங்காத சோகத்தை ஏற்படுத்தி உள்ள இந்த சுனாமி நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனியில் மீனவ மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மீனவர்கள் கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு கணவாய் மீன்பிடி தொழிலாளர் நலச்சங்க முனியசாமி தலைமை தாங்கினார்.

இதே போன்று திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். மேலும் சுனாமி தினத்தையொட்டி தூத்துக்குடியில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.