தூத்துக்குடி மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான 19 மீனவர்களும் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த ரவிக்கு சொந்தமான விசைப்படகில் மிக்கேல்ராஜ், ஜெகன், கில்பர்ட், ஜோசப், குழந்தைராஜ், ராஜ், வல்லவன், வசந்த், ராமர், டால்வின் ஆகிய 10 பேர் கடந்த 1 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதேபோல, பவுல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் விஜி, சுதாகர், அந்தோணி, விக்கி, அன்சாரி, செல்வராஜ், ஜோபின், எபிஸ்டன், செல்வம் ஆகிய 9 பேரும் 1ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மோசமான வானிலை காரணமாக மற்ற படகுகளில் சென்றவர்கள் கரை திரும்பிய நிலையில், இரண்டு விசைப்படகுகளில் இருந்தும் தகவல் தொடர்பு கிடைக்காததால் 19 மீனவர்களின் கதி என்ன என்ற சூழல் நிலவியது. இதையடுத்து, 19 மீனவர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்திய கடலோர காவல் படை, கடற்படை ரோந்துக் கப்பல்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் மூலம் மீனவர்களை தேடும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்றது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து தென் மேற்கே ஏறத்தாழ 185 கடல் மைல் தொலைவில் சர்வதேச எல்லை பகுதியில் இரண்டு விசைப்படகுகளும் நிற்பதை கடலோரக் காவல் படையின் அபிராஜ் ரோந்து கப்பலில் இருந்த வீரர்கள் கண்டுபிடித்து பத்திரமாக மீட்டனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மீட்கப்பட்ட 19 பேரும் கடலோரக் காவல் படை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு புதன்கிழமை மாலை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக கடலோர காவல் படை கட்டளை அதிகாரி வெங்கடேஷ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *