தூத்துக்குடியில் விமான நிலையம் ரூ.600 கோடியில் விரிவாக்கம்

தூத்துக்குடி இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்க செயலாளர் கோடீசுவரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சென்னை தென்மண்டல விமான நிலையங்கள் ஆணைய குழும இயக்குனர் ஸ்ரீகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏ321 ரக விமானங்கள் தரையிறங்கும் வகையில் ஓடுதளம் மற்றும் விமானங்களை நிறுத்தும் வசதி, புதிய முனையம் உள்ளிட்ட அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான முதல் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.600 கோடி மதிப்பில் விமான நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதில் 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம் கொண்ட விமான ஓடுதளம், இரவில் விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதிகள், 5 விமானங்களை நிறுத்துவதற்கான வசதி, தீயணைப்பு நிலையம், பயணிகள் வசதிக்காக புதிய கட்டிடங்கள், கார், பஸ் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தற்போது தமிழக அரசு ஒப்படைத்து உள்ளன இடத்தை சுற்றி 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏ321 ரக பெரிய விமானங்கள் தரையிறங்கும். இரவு நேரத்தில் விமானங்கள் இயக்கும் வசதி, விமானங்களை நிறுத்தி வைக்கும் வசதி, நேரடியாக தொலைவில் உள்ள ஊர்களுக்கு விமான சேவை கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய பொதுமேலாளர்(சிவில்) ராஜசேகர், இணை பொது மேலாளர்(சிவில்), தூத்துக்குடி விமான நிலைய இயக் குனர் சுப்பிரமணியன் மற்றும் எட்வின் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.