ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபு, வேல்ராஜ், சந்தனகுமார் உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 60 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு., ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, செயலாளர் ரசல் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநகர செயலாளர் ராஜா, முருகன், முத்து, பூமயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள பண்டாரம்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். கிராமமக்களில் சிலர் மாசு பாதிப்பை வலியுறுத்தும் வகையில் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வந்தனர். அவர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.
பின்னர் இந்த அமைப்பினர் தனித்தனியாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுக்களில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 48ஏ-ன் படி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஆனால் சமீபகாலமாக நடந்து வரும் நிகழ்வுகளால் ஆலையை மீண்டும் திறந்து விடுவார்களோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மக்களின் நலனை பாதுகாக்க அரசாணைக்கு சட்டரீதியாக வலுசேர்க்கவும், சட்டவலிமை இல்லாத ஆணையால் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் சூழ்நிலை உருவாவதை தடுக்கவும், தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து வெளியேற்ற வேண்டும். தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை ஜனநாயக முறையில் வெளிப்படுத்த அறவழிப்போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுக்களில் கூறி உள்ளனர்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மனு கொடுக்க வர வேண்டும் என்று வாட்ஸ்-அப்பில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மனு கொடுக்க வந்தவர்கள் உரிய விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியிலும் போலீசார் முக்கிய வீதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதே போன்று தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் தூத்துக்குடியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.