பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் தாலுகா அலுவலகங்களில் இன்று நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று (சனிக்கிழமை) பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
பொது வினியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்துக்கான சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது.
இந்த முகாமில், ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன ஸ்மார்ட் கார்டுக்கு பதிலாக புதிய கார்டுகள் பெறுதல் போன்ற குறைகள் முகாமிலேயே சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தலைவர் படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இந்த முகாமில் பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகா அலுவலகங்களில் தனித்துணை கலெக்டரும் (சமூகபாதுகாப்புத்திட்டம்), திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளரும் (நிலம்) மற்றும் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் கலால் உதவி ஆணையரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *