தூத்துக்குடி மாநகராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கு புதிய ஒப்பந்தம் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கு புதிதாக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக, ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டு உள்ள பிரதான குடிநீர் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவு மற்றும் குடிநீர் குழாய் உடைப்பு ஆகியவற்றால், உரிய அட்டவனை மற்றும் கால அளவுக்குள் குடிநீர் வினியோகம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.எனவே தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் கருதி குடிநீர் வினியோகம் சீராக நடைபெறவும் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையிலும், மாநகரின் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு 100 சதவீதம் வழங்கப்பட்டு உள்ளது என்பதை உறுதி செய்யும் வகையிலும், குடிநீர் தொடர்பான புகார்களை உடனடியாக சரிசெய்வதற்கு வசதியாகவும் புதிய திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி, சென்னையை சேர்ந்த தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு கழகம் என்னும் அரசு நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு பணி ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த நிறுவனம் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிறுவனம் ஆகும். குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனம் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை பராமரித்தல், குடிநீர் இனைப்புகளுக்கான அளவுமானியை கண்காணித்தல், நீரேற்று நிலையம், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை இயக்கி பராமரிப்பு செய்தல், குடிநீர் வினியோகம் சீராக கிடைக்கப்பெறாத பகுதிகளை ஆய்வு செய்து குடிநீர் விநியோகம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். அதே போன்று அனுமதியின்றி எடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இந்த நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.