மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி 30-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி வருகிற 30-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோருக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற 30-ந் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.
இதில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், குள்ளமானவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டி, இறகு பந்து, மேஜைபந்து போட்டிகள் நடக்கிறது. முற்றிலும் பார்வையற்றோருக்கான 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், மிகக்குறைந்த பார்வையற்றோருக்கான 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், கைப்பந்து போட்டி, புத்தி சுவாதினம் தன்மை இல்லாதவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், புத்திசுவாதினம் உள்ளவர் களுக்கு 100 மீட்டர் ஓட்டம், எறிபந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. காது கோளாதோருக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம், கபடி ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவசான்று, மாவட்ட மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று, தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் தவிர்க்க முடியாத ஆணை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று கொண்டு வர வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்பவர்கள், அதற்கான நுழைவு விண்ணப்பத்தை வருகிற 29-ந் தேதி(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் “மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டுஅரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி-1, தொலைபேசி எண்: 0461-2321149“ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தொடர்ந்து 30-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு வர வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *