ஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த புனித பயணம் பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத் ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதம் தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இந்த புனித பயணம் டிசம்பர் அல்லது வருகிற ஜனவரி மாதம் முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயண காலம் 10 நாட்கள்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவற்றை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்“ என்று குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், கல்சமகால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை–600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.