தூத்துக்குடியில் சித்த மருத்துவக் கண்காட்சி

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, தூத்துக்குடி மாவட்டம் சார்பில் 2 ஆவது தேசிய சித்த மருத்துவ தினம் மற்றும் சித்த மருத்துவத்தின் மகிமை குறித்து சித்த மருத்துவக் கண்காட்சி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கிவைத்தார்.
கண்காட்சியில்  நூற்றுக்கும் அதிகமான அரியவகை மூலிகைகள், அதன் அறிவியல் பெயர்கள், பயன்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.  பாரம்பரிய உணவு வகைகளான பிரண்டை துவையல்,  உளுந்தங்களி,  வாழைப்பூ வடை போன்ற பல வகை உணவு வகைகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன

மேலும், சித்த மருத்துவத்தின் மகளிர் மற்றும் குழந்தை நலன் சார்ந்த காட்சி விளக்கப்படங்கள், மருந்துகள், அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் போன்றவை பற்றி விளக்கப்பட்டிருந்தன.

சித்த மருத்துவத்தின் சிறப்பான புற மருத்துவ முறைகள் பற்றி விளக்கப்படங்கள் மருந்துகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதேபோல, சித்த மருத்துவத்தின் வாழ்வியல் சார்ந்த பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பற்றிய பதாகைகள் மற்றும் குறிப்பேடுகள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, சித்த மருத்துவம் குறித்த கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி,  சுகாதாரப் பணிகள் தூத்துக்குடி மாவட்ட இணை இயக்குநர் பரிதா ஷெரீன்,  தூத்துக்குடி அரசு மருத்துவமனை துணை உறைவிட மருத்துவர் பால்பாண்டியன்,  ஒட்டநத்தம் வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.