தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு சங்க தேர்தல் 3.37 சதவீதம் வாக்கு பதிவு

தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த மேலூர் கூட்டுறவு சங்க தேர்தலில் 3.37 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானது

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கியில் 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது நடந்த பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 14–ந் தேதி வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் 61 பேர் மனுதாக்கல் செய்தனர். தொடர்ந்து நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது, 32 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 29 பேர் களத்தில் இருந்தனர். வேட்பு மனு வாபஸ் பெறும் கடைசி நாளான 17–ந் தேதி 9 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். தற்போது 20 பேர் களத்தில் இருந்தனர். இதில் 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 6 இடங்களுக்கு 15 பேர் போட்டியிட்டனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி திருமண மண்டபத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை முதல் வாக்காளர்கள் குறைந்த அளவில் வந்து வாக்களித்தனர். வாக்காளர்கள் ஒவ்வொருவரும் பலத்த சோதனைக்கு பிறகு ஓட்டு போடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மொத்தம் 790 ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி இருந்தது. இது 3.37 சதவீதம் ஓட்டுக்கள் ஆகும்.

தொடர்ந்து ஓட்டுபெட்டிகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டன. இந்த ஓட்டுக்கள் இன்று(வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.