அகில இந்திய தொழில் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் – 16-ந்தேதி கடைசி நாள்

அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வராக பங்கேற்க விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 16-ந்தேதி கடைசிநாள் ஆகும்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் (என்.சி.வி.டி.) நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. குறைந்தபட்சம் 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும், விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் அரசு பதிவு பெற்ற நிறுவனத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்று உள்ள முறையான பணியாளராகவும், தற்போது பணியில் உள்ளவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் முழுநேர பணியாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவில் மாநில வாழ்வியல் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, அதே பயிற்சி காலம் மற்றும் கல்வித்தகுதி சான்றிதழ் வைத்து இருப்பவர்கள், பருவ முறைப்படி பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்களும், தொழில் பழகுனர் சட்டம் 1961-ன் கீழ் தொழில் பழகுனர் பயிற்சி பெற்று தொழில் பழகுனர்களுக்கான தொழில் தேர்வில் 6 முறை தோல்வி அடைந்தவர்களும் தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்களுக்கு முதல்நிலை தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 13, 14-ந் தேதிகளில் சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஜனவரி, பிப்ரவரி 2019-ல் நடைபெறும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். தொழிற்பிரிவுக்கு ஏற்ப அனைத்து தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு என்.சி.வி.டி மூலம் தேசிய தொழில் சான்றிதழ் வழங்கப்படும்.

தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்களுக்கு, தொழில் தேர்வுக்கு உரிய விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு ஆகியவை வருகிற 16-ந்தேதி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்கப்படுகிறது. ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 16-ந் தேதிக்குள் தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *